
தமிழகத்தில் பெய்த கனமழையால் நேற்று பல மாவட்டங்களில் பள்ளி மாணவி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் பேர், ஊர் உள்ளிட்ட முழு விவரமும் கீழே கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகள் வினோஷா (16) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை தங்களுடைய விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுக்கொண்டிருந்தார் வினோஷா. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த சத்தத்துடன் வினோஷா மீது மின்னல் தாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வரகுப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி அஞ்சலி (36) நேற்று மாலை வயல்வெளிக்கு சென்ற போது மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். அதே போல் திண்டிவனம் பெரும்பாக்கத்தை சேர்ந்த துரைசாமியின் மனைவி ரஞ்சிதமும் (60) மின்னல் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரையில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பேரையூர் தாலுகா அனுப்பபட்டியை சேர்ந்த பாண்டி (40) கேத்துவார்பட்டி கிராம கண்மாய் கரைக்கு அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் அடித்து உயிரிழந்துவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த அன்பு (38) ஒரு இளநீர் வியாபாரி. நேற்று மாலை இவர் வியாபாரத்திற்காக கரடி கிராமத்திற்கு சென்று திரும்பி வருகையில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் வண்டியை நிறுத்தி விட்டு புளியமரத்திற்கு அடியில் நின்றுள்ளார். அப்போது திடீரென அவர் மீது மின்னல் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.