கல்லூரியின் சீனியர் என்.சி.சி வகுப்பில் சரியாக செயல்படாத மாணவர்களை கம்பால் சரமாரியாக அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இருக்கும் பண்டோத்கர் கல்லூரி மிகவும் பழமையான கல்லூரியாகும். இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் என்.சி.சி வகுப்பு நடத்தப்பட்டு பல நல்ல விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியின் என்.சி.சி வகுப்பில் சில மாணவர்கள் சரியாக செயல் பட வில்லை. அதனை கண்ட சீனியர் மாணவர் ஒருவர், அவர்களை அழைத்துச் சென்று தரையில் குப்பிற படுக்க வைத்து கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்துள்ளது, இருப்பினும் கொடூரமாக அவர் தாக்கியதில் மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி உள்ளனர்.
இதனை கண்ட மற்ற வகுப்பு மாணவர்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இது போன்ற கொடூர சம்பவத்தை கல்லூரி தடுக்க வேண்டும் என்றும், அந்த சீனியர் மாணவரை கண்டித்தும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் கை மீறி சென்றதால், இதற்கு கல்லூரி முதல்வர் சுசித்ரா நாயக் விளக்கம் அளித்துள்ளார். நடந்த சம்பவத்தை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆசிரியர் இல்லாத சமயத்தில் சக மாணவர்களை கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.