கழிப்பறையில் கேமரா.. ஆபாச வீடியோ எடுத்த கல்லூரி மாணவிகள்..

By Nandhinipriya Ganeshan Updated on :
கழிப்பறையில் கேமரா.. ஆபாச வீடியோ எடுத்த கல்லூரி மாணவிகள்..Representative Image.

கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகள் அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவியை கழிப்பறையில் இருக்கும்போது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோவை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் வாட்ஸாப் குழுவிற்கு அனுப்பியும் வைத்துள்ளனர். இதை கண்டு அதிர்ந்துபோன கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையில், மாணவியை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ இணையதளத்தில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், உடுப்பி மல்பே போலீசார் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை குறித்து வழக்கு பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட 3 மாணவிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக கல்லூரிக்கு நேரில் சென்ற மகளிர் ஆணையத் தலைவர் குஷ்பு, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவிகளே சக மாணவியை  ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சக மாணவிகளிடையே பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான செய்திகள்