
மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி முடிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பதவி வகிக்கிறார். முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருந்தார். இவர், முதலமைச்சராக பதவி வகித்த சமயத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. சிவேசான கட்சி பிளவுபட்டதன் காரணமாக, முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி அமைந்தது.
அவ்வப்போது, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. அதிலும், கடந்த ஆண்டு இவர் கூறிய “அந்த காலத்தின் அடையாளம் சத்ரபதி சிவாஜி என்றும், இந்த காலத்தின் அடையாளம் அம்பேத்கர், நிதின் கட்காரி என்றும் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் போன்றோர் இல்லாவிட்டால் பணமே இருக்காது என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பதவி விலகல் முடிவை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, மீதி காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகலில் ஈடுபட விரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது