
சமீபத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பேசியிருந்தார். இது நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன் விளைவாக தமிழக சட்டமன்றத்திற்கு உரையாற்ற வந்த ஆளுநரை திமுக -வின் கூட்டணிக் கட்சிகள் உரையாற்ற விடாமல் முழுக்கமிட்டதால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
பின்னர், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வரிகளை நீக்கியும், சில வார்த்தைகளை சேர்த்தும் ஆளுநர உரையாற்றினார். இதனால், ஆளுநர் அவையில் இருக்கும்போதே ஆளுநர் உரைக்கு கண்டன தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்தார். இதனால், ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்தநிலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக அரசு என்றும், தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் நாட்டு மக்களிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர், திமுக -வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநர் குறித்து முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆளுநரும் குடியரசு தலைவரும் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழகம் என்று பெயர் மாற்ற செய்ய சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில், வரும் குடியரசு தின விழாவுக்காக ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'தமிழ்நாடு அரசு' முத்திரையுடன், 'தமிழ்நாடு ஆளுநர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமா? தமிழ்நாடா? என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.