
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பினை உருவாக்கின. அதில், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்துகொண்டன. ஆண்டுதோறும் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமையேற்று இந்த மாநாட்டை நடத்துவது வழக்கம். அந்த வகையில், 23வது ஆண்டாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்தியது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில், அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கண்டிக்கத் தயக்கம் காட்டக்கூடாது என்றார். உலக அமைதிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறிய அவர், தீவிரவாத விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியைத தடுத்து நிறுத்த உலக நாடுகளிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டுமெனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டில், வர்த்தகம், போக்குவரத்தை வலுப்படுத்துவது, பிராந்தியப் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.