ஆசிரியர் காலியிடங்கள் தொடர்பான வழக்கு - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

By selvarani Updated on :
ஆசிரியர் காலியிடங்கள் தொடர்பான வழக்கு - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.Representative Image.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சென்னை மாநகராட்சி ஆணையரும், கல்வித்துறை துணை ஆணையரும் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய செல்வகுமார் என்பவர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் செல்வகுமார், 2019ம் ஆண்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆசிரியர் காலியிடங்கள் தொடர்பான வழக்கு - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.Representative Image

அப்போது மாநகராட்சி தரப்பில், 2013 - 14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் மனுதாரர் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 22 பேருக்கு அதே ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2013 முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியுள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 400 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் 400 காலியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை பள்ளிகள் நடத்தப்படுகின்றன? அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன? அந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன? கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஜூலை 26 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், கல்வித்துறை துணை ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சென்னை மாநகராட்சி ஆணையரும், கல்வித்துறை துணை ஆணையரும் நேரில் ஆஜராக வேண்டி வரும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்