கைதுக்கு பின் 2 மில்லியன் பேர் பார்க்கும் ட்விட்டர் பதிவு வெற்றிக்கு திமுகவே காரணம்..! - சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேட்டி.

By selvarani Updated on :
கைதுக்கு பின் 2 மில்லியன் பேர் பார்க்கும் ட்விட்டர் பதிவு வெற்றிக்கு திமுகவே காரணம்..! -  சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேட்டி.Representative Image.

சர்ச்சைக்குரிய விதத்தில் ட்விட்டர் பதிவு செய்து கைது செய்யப்பட்ட சண்டை பயிற்சியாளர் இயக்குனர் கனல் கண்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தார். இந்து முன்னணி நிர்வாகிகள் கனல் கண்ணனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவுடன் சிறைச்சாலை எதிரில் இருந்த சுடலை மாடன் கோவில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கணல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்களுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும், அந்த காட்சியின் பின்னணியில் தமிழ் திரைப்படப் பாடலும் இடம் பெற்று இருந்தது. வெளிநாட்டு மத கலாச்சாரம் இதுதான் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக திமுக ஐடி பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த பத்தாம் தேதி நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாரால் சண்டை பயிற்சி இயக்குனர் கணல் கண்ணன் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் கணல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. காலை மாலை இரு வேலைகளிலும் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் கையெழுத்து இடவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கைதுக்கு பின் 2 மில்லியன் பேர் பார்க்கும் ட்விட்டர் பதிவு வெற்றிக்கு திமுகவே காரணம்..! -  சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேட்டி.Representative Image

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து இன்று காலை சண்டை பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் பிணையில் வெளியே வந்த நிலையில் சிறைச்சாலை வாசலில் இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் இந்து அமைப்பினர் மலர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் அவருக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள சுடலைமாடசாமி திருக்கோவிலில் கனல் கண்ணன் மற்றும் இந்து அமைப்பினர் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனல் கண்ணன் பேசுகையில், இந்து முன்னணி கலை பண்பாட்டு பிரிவை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தமிழகத்தின் பண்பாடு கெட்டு விடக்கூடாது என்பதன் காரணமாக ட்விட்டர் பதிவு ஒன்றை செய்தேன். அதை திமுகவினர் மிகப்பெரிய ஹிட்டாக்கி விட்டனர். நான் அந்த வீடியோ பதிவு செய்யும்போது ஐயாயிரம் நபர்கள் மட்டுமே பார்த்தார்கள். என் கைதுக்கு பின்னர் 2 மில்லியன் நபர்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இந்த வெற்றிக்கு திராவிட கட்சி அரசியல் தான் காரணம். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து போட்ட சட்டை கசங்காமல் வெளியே வந்திருக்கிறேன், என்றார்.

தொடர்பான செய்திகள்