
சென்னை: எதிர்கட்சிகளில் கூட்டத்தை திசை திருப்பவும், தோல்வி பயத்திலும் பாஜக அமலாக்கத்துறையை ஏவி விடுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க 26 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக பீகார் மாநிலம், பாட்னாவில், அம்மாநில முதல்வர் நித்திஷ் குமார் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் பெங்களூரு சென்றார்.
இந்நிலையில் காலை முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு அலுவலங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம், சைதப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அமைச்சர் பொன்முடியின் மகன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 11ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் விமானநிலையத்தில் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாட்னாவில் கூடி முக்கிய முடிவுகளை எடுத்தோம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது. பாஜ., எரிச்சல் அடைந்திருப்பதன் விளைவுதான், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது.
பாஜகவை வீழ்த்த பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறேன். தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கூட்டதை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது. அமலாக்கத்துறை சோதனையை கண்டு திமுக பயப்படாது. 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெறாத அமலாக்கத்துறை சோதனை தற்போது ஏன்?. பெங்களூருவில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன. வடமாநிலங்களில் நடந்த சோதனை தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளது; அமலாக்கத்துறை சோதனை கண்டு கவலைப்படவில்லை. பாஜகவின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. இவ்வாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.