
புதுச்சேரி மாநிலத்தின் 15வது சட்டப்பேரவைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் என்னென்ன திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 9, 2023 அன்று புதுச்சேரி மாநிலத்திற்கான 15வது சட்டப் பேரவைக்கான பட்ஜெட் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் உரையாடலுடன் தொடங்கியது. அதனை நிதியமைச்சராக இருக்கும் புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் மக்களின் நலன் கருதி பல புதிய திட்டங்களுடன் ரூ. 11,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவற்றுள் எந்த மாரியான திட்டங்கள், யாருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் குறித்த தகவலைப் பற்றி பாப்போம்.
முதலில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் கூடிய சீக்கிரம் லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெண் குழந்தைகள் சமுதாயத்தில் யாருடன் உதவியும் இன்றி வாழ, புதுச்சேரி முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50,000/- அளிக்கப்படும். இது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்களுக்கு 18 வயதாகும் வரை நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300/- மானியம் அளிக்கப்படும். தற்போது அதிகரித்து வரும் சிலிண்டர் விலை காரணமாக மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாகும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டத்தால் ஒரு வருடத்திற்கு 126 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதையும் சுட்டிக்காண்பித்துள்ளார்.
இவை தவிர 70 முதல் 79 வயது வரையில் இருக்கும் மீனவ முதியோர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை ரூ.3000/- இல் இருந்து ரூ.3,500/-க்கு உயர்த்தி வழங்கப்படும். மேலும் வணீக ரீதியாக செயல்படும் புதுச்சேரி துறைமுகம் மற்றும் விமான நிலையமும் மேம்படுத்தப்படும். புதுச்சேரியில் உள்ளூர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெறும் எனவும் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.