
சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் கட்டப்பட்டுள்ள அண்ணா மாளிகையை நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நிதி ஒதுக்கியவர் என்ற முறையில் எழும்பூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான ரவிச்சந்திரனும் பங்கேற்றார்.
மேலும், இவ்விழாவில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்பது ஜோடிகளுக்கு இலவசமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார் அமைச்சர் உதயநிதி. திருமண ஜோடிகளுக்கு திருமண சீர் வரிசைகளையும் வழங்கினார். அதன்பிறகு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, பொதுவாக இதுபோன்ற திருமண விழாக்களின்போது 'கருணாநிதியும் தமிழும் போல..' 'மு.க.ஸ்டாலினும் உழைப்பும் போல..' மணமக்கள் வாழ வேண்டும் என்று கூறி தான் வாழ்த்துவார்கள்.
ஆனால், மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இதை பெண்கள் யாரும் தவறாக நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டு, தனது பேச்சை தொடங்கினார். தற்போது தமிழகத்தில் என்று நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். எனவே, மணமக்கள் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போன்று வாழக்கூடாது. எதற்காகவும் உங்க சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது வேண்டுமோ அதை கேட்டு பெற்றிடுங்கள் என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அறிவுரை வழங்கினார்.
ஒருமுறை நான் சட்டசபையில் கூட பேசியிருந்தேன். அதாவது, எடப்பாடி பழனிசாமி அவர்களே.. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே.. நீங்க தெரியாமல் என்னுடைய காரில் ஏறிவிட்டீர்கள். எங்கள் காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள். நான் ஏதும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன். ஆனால், கமலாலயம் மட்டும் சென்றுவிடாதீர்கள் என்று பேசியிருந்தேன். அப்போது, படக்கென்று எழுந்த ஓ. பன்னீர்செல்வம் 'எந்த காலத்திலும் எங்க கார் அங்க போகாது' என்று சொன்னார். ஆனால், ரெண்டு பேரும் கமலாலயத்துக்கு போட்டிப்போட்டு சென்று சுமார் 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்.. நீங்களே பாருங்கள்.. என்று கூறிய அமைச்சர் உதயநிதி இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை என்று தனது உரையை முடித்துக்கொண்டார்.