ஆடிமாத சீர்வரிசையில் தக்காளி: பெண் வீட்டார் அசத்தல்!

By Baskaran Updated on :
ஆடிமாத சீர்வரிசையில் தக்காளி: பெண் வீட்டார் அசத்தல்!Representative Image.

வேலூர்: தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், புதுமண தம்பதிக்கு வழங்கிய ஆடிசீர்வரிசையில் தக்காளி இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரத்து குறைவு, வடமாநிலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் உள்ள மக்கள் நேபாளத்திற்கு சென்று தக்காளியை வாங்கி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி ஒருபுறம் இருக்க ஆடிமாத சீர்வரிசையில் புதுமண தம்பதிக்கு வழங்கிய சீர்வரிசையில் தக்காளி இடம்பெற்றுள்ளது பேசும் பொருளாகி விட்டது. வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தைச் சேர்ந்த கனிஷ்குமாருக்கும், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த லீலா பிரியாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆடிமாதத்தையொட்டி பெண் வீட்டார் சீர் கொடுத்து பெண்ணை ஆடி மாதம் முழுவதும் தங்களது வீட்டில் வைத்திருக்க அழைத்து செல்வது வழக்கம். இதேபோல் லீலா பிரியாவின் பெற்றோரும் இன்று மாப்பிளை வீட்டிற்கு பெண்ணை அழைக்க வந்தனர்.

அப்போது அவர்கள் மாப்பிளை வீட்டிற்கு கொண்டு வந்த சீர்வரிசையில் தக்காளியும் இடம்பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தக்காளி கிலோ ரூ.130முதல் 140 வரை விற்கப்படுவதால், அதை சீர்வரிசையாக கொடுக்க முடிவு செய்ததாகவும், பெண் வீட்டார் தரப்பில் கூறப்பட்டது. மாப்பிளை வீட்டாரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். ஆப்பிள், மதுளை என பழங்களில் மத்தியில் தக்காளியும் இடம்பெற்றிருந்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.

தொடர்பான செய்திகள்