தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பி வீடுகளில் விரைவில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கன் மற்றும் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா பேசியாதவது,
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மாட்டோம். மேலும் மேகதாது அணைகட்டியே தீருவோம் என்று கூறிவரும் கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழக முதல்வர் சென்றது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்ததாக நடைபயணம் மேற்கொள்ளும் போது கிராமமாக பட்டி தொட்டி எங்கும் திமுகவினர் செய்துள்ள ஊழலை பிரச்சாரமாக எடுத்து வைக்க உள்ளார். பல்வேறு ஊழல் செய்ததன் காரணமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதுவும் கிடையாது. இந்த அமலாக்கத்துறை சோதனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பி ஆகியோர் மீது கூட விரைவில் இருக்கலாம். முட்டை வழங்குவதில் ஊழல், சத்துணவு ஊழியர் நியமனத்தில் ஊழல் போன்ற ஊழல் காரணமாக இது நடைபெறும். இவ்வாறு, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.