நீதிமன்றங்களில் தலைவர்களின் சிலை - சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தல்!

By selvarani Updated on :
நீதிமன்றங்களில் தலைவர்களின் சிலை - சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தல்!Representative Image.

புதுச்சேரி: மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகளை நீதிமன்றங்களில் வைக்கவும், சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நீதிமன்ற வளாகங்களில் வைக்க கூடாது எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அம்பேத்கரின் உருவப்படங்களை நீதிமன்றத்தில் வைக்கவும், மூத்த வழக்கறிஞர்களின் படங்களை வைக்கவும் அனுமதி கோரப்பட்டது. இந்த கோரிக்கை உயர்நீதிமன்றம் பலமுறை நிராகரித்தது. கடந்த 2008 ம் ஆண்டு அனைத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் அம்பேத்கரின் உருவப்படங்களை நிறுவ வேண்டும் என்ற அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 2010ம் ஆண்டும் இதே கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

அதில், அரசியல் தலைவர்களின் உருவ சிலைகள் நிறுவப்பட்டதால் அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்க கூடாது என உத்தரவிட்டது. 2011ம் ஆண்டும் சிலைகளை நீதிமன்ற வளாகத்தில் நிறுவக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. 2013ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலந்தூர் நீதிமன்ற நுழைவாயிலில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவிட்டது.

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிடுவதும் சிலைகள் அப்புறப்படுத்தப்படுவதும் தொடர்ந்த நிலையில் 2013ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை மற்றும் படங்களை அகற்ற உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிடுவதும், வழக்கறிஞர்கள் கோரிக்கை வைப்பதும் தொடரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை வைக்கவும், அம்பேத்கரின் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என ஜூலை 07ம் தேதி உத்தரவிட்டது. அதில், தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்களை மட்டுமே வைக்கலாம் எனவும், நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் புகார் அளிக்கவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறையின் இந்த அதிரடி உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஜூலை 23ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்டரீதியாக நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்