மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் ரீதியாக கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழக முழுவதும் நடந்து வருகின்றன. அதன்படி நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியாதவது,
பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஆட்சி முடியும் வரை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என உறுதியோடு இருந்தார்.
பிரதமர் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நிலை உருவானதும் வேறு வழியில்லாத சூழலில் பத்திரிகையாளர்கள் மணிப்பூர் கலவரத்தை மையப்படுத்தி மத மோதல்கள் நடைபெறுகிறது. சிறுபான்மையினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.அதற்கு எனது டிஎன்ஏவில் ஜனநாயகம் இருக்கிறது என பிரதமர் பதில் அளித்தார்.
மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பாஜக ஆர் எஸ் எஸ் - ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம்.. இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது. யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொதுச்சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பாஜக செய்து வருகிறது.
மக்களை பிளவுபடுத்தி தேர்தலை சந்திப்பது தான் அவர்களது வேலை. ஜல்லிக்கட்டு நடத்தக் கடும் எதிர்ப்புகள் இருந்த நிலையிலும் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவை விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டது. நீட் பிரச்சனையில் விதிவிலக்கு கேட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து சட்டம் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஜனாதிபதி அதற்கான ஆணையை பிறப்பிக்க முடியும்.
அதற்கான எந்த முயற்சியையும் பாஜக செய்யாமல் இருந்து வருகிறது. மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி எதை வேண்டுமானாலும் செய்யும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.