அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானது..! - பிரதமர் மோடி தகவல்

By Baskaran Updated on :
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமானது..! - பிரதமர் மோடி தகவல்Representative Image.

புதுடெல்லி: ரோஜ்ஹர் மேளா நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ரோஜ்ஹர் மேளா நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது வருவாய்த்துறை, அஞ்சல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது,

இந்தியா வளர்ச்சி பாதையில் பணியாற்றி கொண்டு இருக்கும் போது, அரசு ஊழியராக பணியாற்றுவது பெருமை அளிக்கும் விஷயம். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு முக்கியமானது. உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும். உலக நாடுகளின் கண்கள் இந்தியாவை நோக்கி உள்ளன.

வங்கித்துறை மிக வலுவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா உள்ளது. ஆனால்,9 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை. கடந்த ஆட்சியில் வங்கித்துறை பெரிய அழிவை சந்தித்தது. இன்று டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். 9 ஆண்டுகளுக்கு முன்பு ‛போன் பேங்கிங்' வசதி 140 கோடி குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. சில குடும்பங்களுக்கு நெருக்கமானவர்கள், வங்கிகளுக்கு போன் செய்து பல ஆயிரம் கோடி கடனை பெற்றுக் கொண்டனர். ஆனால் அவை திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த ‛போன் பேங்கிங் ' மோசடி முந்தைய ஆட்சியில் நடந்த மிகப்பெரிய மோசடி ஆகும்.

இந்த மோசடி காரணமாக வங்கித்துறையில் முதுகெலும்பு உடைந்தது. 2014க்கு பிறகு, வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்தோம். அரசு வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தினோம். சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகள் உருவாக்கப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டால், ஏற்படும் இழப்புகளை குறைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பணியாற்றி வருகிறோம்.

தொடர்பான செய்திகள்