தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க தடை கோரிய மனு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

By saraswathi Updated on :
தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க தடை கோரிய மனு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!Representative Image.

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அரசுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த 2018ம் ஆண்டு அரசு இயற்றிய சட்டத்தில், அரசு சட்டக்கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்க வகை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் சட்டக்கல்லூரிகள் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில்லை என்றும், ஏழை மற்றும் விழிம்பு நிலை மாணவர்கள் குறைந்த செலவில் சட்டக் கல்வியை பெறமுடியாது எனவும் சட்டக் கல்வியின் தரம் தாழ்ந்து விடும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை விடுத்து, சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் துவங்கவும், தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அரசுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்பான செய்திகள்