அமலாக்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமைச்சர் பொன்முடி நல்ல தெம்பாக இருப்பதாகவும், அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கம் கொடுத்துள்ளதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில், பின்னர் அமைச்சரை இல்லத்தில் மீண்டும் அழைத்து வந்து அமலாக்கத்துறையினர் வாக்குமூலம் வாங்கி விட்டு சென்றுவிட்டனர். சோதனையின் முடிவில் 41 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று திமுகவின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சி.வி.கணேசன், ரகுபதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, என்.ஆர் .இளங்கோ மற்றும் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.மாதவரம் சுதர்சனம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி பேசியாதவது, 20 மணி நேரத்திற்கு மேலாக பொன்முடியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை காண வந்தேன். ஒரு துணைப் பொதுச் செயலாளர் என்கிற முறையிலும் திமுக அமைப்பு செயலாளர் என்ற முறையில் அவரை சந்திக்க வந்துள்ளேன். பொன்முடி அவர்கள் நன்றாக தெம்பாக தான் உள்ளார். திமுகவிற்கு சிறைச்சாலையும் விசாரணையும் புதுசு அல்ல. பார்த்து பார்த்து பழக்கப்பட்டதுதான். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு தைரியமும் ஊக்கமும் கொடுத்துள்ளார்.