எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலைக்கு மதுபானம் கொள்முதல் - டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி.

By selvarani Updated on :
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலைக்கு மதுபானம் கொள்முதல் - டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி.Representative Image.

டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விலக்கு கோர முடியும் என விளக்கமளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்தும், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பன குறித்த விவரங்களை கேட்டு, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி, எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டப்பிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது எனவும், இந்த தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு பெற்றவை எனவும் டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது.

மதுபானம் கொள்முதல் செய்ய எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை. நேரடியாக உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், எந்த அடிப்படையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் விலக்கு பெற்றவை என விளக்கமளிக்க டாஸ்மாக் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்பான செய்திகள்