பொது இடங்களில் சிசிடிவி கேமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி தொடக்கம் - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

By selvarani Updated on :
பொது இடங்களில் சிசிடிவி கேமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி தொடக்கம் - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்Representative Image.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுஇடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை கலைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன், ஓய்வு பெறுவதற்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விசாரித்து வந்தது. அந்த வழக்கு தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், பொறியாளர் சுவாதி படுகொலைக்கு பிறகு, சரியாக சம்பவம் நடந்த ஓராண்டில் 69 சதவீத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பயணங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஆகியவற்றிலும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ரயில்வே துறைக்கு அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு நாட்களில் முடிக்கபடும் என்பதையும் அறிக்கையில் தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்பான செய்திகள்