தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை கொடுத்து அசத்திய முன்னாள் மாணவர்கள்!

By selvarani Updated on :
தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை கொடுத்து அசத்திய முன்னாள் மாணவர்கள்!Representative Image.

கோவை வெள்ளலூர் அரசுப்பள்ளி வைரவிழாவை முன்னிட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்டித் தந்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து கொடுத்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 1961 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளியின் வைரவிழா ஆண்டை அப்பள்ளியில் 1970 களில் பயின்றவர்கள் முதல் அன்மையில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் வரை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் காமராசரின் பிறந்த நாளான இன்று பள்ளியின் வைர விழா கொண்டாடப்பட்டது. அப்போது, முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான 8 வகுப்பறைகள் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தாமோதிரன் ஆகியோர் திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக மைதானம் என்ற இடத்தில் ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள் மேளதாளம் முழங்க பள்ளிக்கு தேவையான பீரோ, டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலாக கொண்டு வந்து தந்தனர். பள்ளியை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் புதிய வகுப்பறை கட்டித் தந்து, தேவையான பொருட்களை கொடுத்ததாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் கடந்த 60 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய வகுப்பறை கட்டித் தந்து தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான செய்திகள்