ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலை கடையில் மக்கிய நிலையில் பருப்பு வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் 160 ரேசன் கார்டு உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பகுதிநேர நியாய விலை கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
அதில் பருப்பு மட்டும் மக்கிய நிலையில் துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் பருப்பு வாங்க மறுத்தனர். ஆனால் நியாயவிலை கடை ஊழியர் பாபு குடோனில் இருந்து இப்படி தான் வந்து இருக்கிறது. இதனை தான் வழங்குவேன் என சொல்லி இருக்கிறார். இதனால் பொது மக்கள் நீண்ட நேரமாக கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்து உள்ளனர். இல்லையென்றால் அடுத்த மாதம் பருப்பு சேர்த்து வழங்க வேண்டும் என ஊழியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலான ஏழை எளிய மக்கள் நியாய விலைக் கடையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இது போன்று தரமற்ற பொருட்களை அரசு நியாய விலைக் கடையில் வழங்கினால் யாரிடம் முறையிடுவது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.