தமிழக சட்டப் பேரவையில், எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரமானது 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கான மசோதா இன்று சட்டப் பேர்வையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க் கட்சிகள், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவானது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,”வெளிநாடு நிறுவனங்கள் பல முதலீடு செய்வதற்கு தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வர வேண்டும் என்பதற்காக இந்த 12 மணி நேர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கட்டாயம் இல்லை எனவும், எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது தொடர்பாக குழு அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் படி, வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் எனவும், இந்த நேரத்தைப் பொறுத்து 4 நாள்களில் வேலை முடிந்து விட்டால் 5-ஆவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.