அனைத்து மாநிலங்களுக்கும் சம வளர்ச்சி.. பட்ஜெட் 2023 குறித்து மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் கருத்து!!

By Editorial Desk Updated on :
அனைத்து மாநிலங்களுக்கும் சம வளர்ச்சி.. பட்ஜெட் 2023 குறித்து மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் கருத்து!!Representative Image.

2023-24 நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விருதுநகரில் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சி பணிகள் இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என விருதுநகரில் பேட்டியளித்துள்ளார்.

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடும் பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக, விருதுநகர் பி.எஸ். சி ஆங்கிலப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சருடன் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.கே.சிங், "பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாணவர்களிடையே இருக்கும் தேர்வு பயத்தை நீக்கி, மன தைரியத்துடன் அவர்கள் தேர்வை எதிர்கொள்ளச் செய்யும் வகையில் ஊக்குவிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

டெல்லி - மும்பை இடையே அமைக்கப்பட்டு வரும் எஸ்பிரஸ் சாலை பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்த சாலை விரைவில் பொதுமக்களின் வாகன போக்குவரத்திற்காக திறந்து விடப்படும். இந்தியா முழுவதும் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

தமிழகத்த்திற்கு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சாலை திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஏராளமான நிதி வழங்கியுள்ளது. சென்னை துறைமுக சாலை பணிகளுக்கும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகளும் சமமாக இருக்கும் வகையில் அமையும்.

பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலத் தேர்வு தமிழக அரசு தான் செய்தது. இதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அங்கு நடக்கும் பிரச்சினைகளை மாநில அரசு தான் கையாள வேண்டும்." என்றார்.

தொடர்பான செய்திகள்