ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு பி.டி.உஷா இப்படி பேசுவாங்கனு எதிர்ப்பார்க்கல.. வீராங்கனைகள் பரபரப்பு..!!

By Nandhinipriya Ganeshan Updated on :
ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு பி.டி.உஷா இப்படி பேசுவாங்கனு எதிர்ப்பார்க்கல.. வீராங்கனைகள் பரபரப்பு..!!Representative Image.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. 

ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் மல்யுத்த வீரர்கள் கோபம் அடைந்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி ஜந்தர் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து அவர் பேசியதாவது, "மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராடுவது நாட்டின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் முதலில் எங்களை தான் அணுகியிருக்க வேண்டும். எங்களிடம் தீர்வு கிடைக்காவிடில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். நேரடியாக தெருக்களில் இறங்கி போராடுவது விளையாட்டு வீரர்களுக்கு அழகல்ல. எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு எந்தவித பிரச்சினையும் வரக்கூடாது என்று தான் விரும்புகிறோம். 

சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிபலிக்கும் எந்த ஒரு வீரருக்கும் உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் நமது சட்டங்கள், விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதை கேட்ட சக வீராங்கனைகள் பி.டி.உஷாவின் பேச்சு பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு பெண்ணாக, முன்னாள் விளையாட்டு வீரராக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்