பழிவாங்கும் எண்ணம்...ஒரே குடும்பத்தை சேர்ந்த...6 பேர் சுட்டுக் கொலை!

By Priyanka Hochumin Updated on :
பழிவாங்கும் எண்ணம்...ஒரே குடும்பத்தை சேர்ந்த...6 பேர் சுட்டுக் கொலை!Representative Image.

மத்திய பிரதேசத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரீனா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் சிஹோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெபா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராய் சிங் நர்வாரியா கூறுகையில், "2013-ம் ஆண்டு தீர் சிங்குக்கும், கஜேந்திர சிங்கின் மகன்களுக்கும் இடையே காலி நிலத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது. இது காலப்போக்கில் சண்டையாக மாறி இறுதியில் இரண்டு குடும்பத்தினரும் "பகை" உணர்வில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பின்னர் அடிக்கடி சண்டை நடைபெற்றதில் தீர் சிங் தரப்பில் இருவர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த சிலர் சிறையில் தள்ளப்பட்டனர். இனிமேல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்த மற்ற கஜேந்திர சிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர். சில நாட்களுக்கு முன்னர் தீர் சிங் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பகை உணர்வு கொஞ்சம் கூட குறையாததால் கஜேந்திர சிங் குடும்பத்தினரை சமரசம் பேச கிராமத்திற்கு அழைத்தனர்.

அதனை நம்பி அவர்கள் கிராமத்திற்கு மீண்டும் வந்தனர். உடனே, தீர் சிங் குடும்பத்தினர் கும்பலுடன் சேர்ந்து இன்று பட்டப்பகலில் கஜேந்திர சிங் குடும்பத்தினரை இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இதில் பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பகை மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக நடந்த இந்த கொலை இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்பான செய்திகள்