
ஓக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன். 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனின் ஆண்டுகள் தண்டனையை 9 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றினார்.
தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த ஆண்டர்சன், சில வாரங்களுக்குப் பின்பு பக்கத்து வீட்டுக்காரரான 41 வயதான ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொன்றது மட்டுமில்லாமல் அவரது இதயத்தை வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது அத்தை மாமாவான லியோன் பை(67) மற்றும் டெல்சி பை ஆகியோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட அந்த பெண்ணின் இதயத்தை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது அத்தை, மாமா மற்றும் அவர்களின் பேத்திக்கு பரிமாறி உள்ளார். அதை அவர்கள் உண்ண மறுத்ததால் மாமா மற்றும் அவரது பேத்தியையும் (4 வயது) கொடூரமாக குத்திக் கொன்றுள்ளார். தடுக்க வந்த அத்தையையும் குத்தி உள்ளார். அவர் சுயநினைவை இழந்ததால், இறந்ததாக எண்ணி ஆண்டர்சன் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இந்த நிலையில் ஆண்டர்சன் கொலை, தாக்குதல் உள்ளிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, ஐந்து தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், விசாரணையின் போது கொஞ்ச நாள் முன்னர் அவர் விடுவிக்கப்பட்ட ஆணை தவறானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது தண்டனை குறைப்பு, சிறை மாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தவறுதலாக ஆண்டர்சன் பெயர் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.