ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 'கோம்' பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாணவிகளை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித் துறை அமைச்சகமும் உறுதி செய்தது.
மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் வைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம். இதன் மூலம் நமது எதிரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
அந்த எதிரிகள் யார் என்று அவர் வெளிப்படயாக கூறவில்லை. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத்தான் ஈரான் எப்போது குற்றம்சாட்டும். இதனால், இம்முறை மறைமுகமாக ரெய்சி பேசி இருக்கிறாரா என்று ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கு முன்னதாக, இளம்பெண் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவி பேசும்பொருளானது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எந்தவொரு பள்ளி மாணவியும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.