
உக்ரைன் - ரஷ்யா போர் சுமார் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்த நிலையில், இன்னும் போர் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய பிறகும், உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷ்ய படைகள் பின்வாங்கின. கைப்பற்றிய பகுதிகளை இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்த போர் ஆரம்பித்ததில் இருந்தே பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யா தனித்துவிடப்பட்டது. சிரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவே இருந்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல், போரிலும் கூட ரஷ்யா திணறியே வருகிறது.
மறுபுறம் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக பல நாடுகளும் ஆயுதங்களையும் வழங்கி வருகின்றனர். இதனால் தான் இதுவரை ரஷ்யாவை சமாளித்து வருகிறது உக்ரைன். இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பகீர் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில் புதின் மிக விரைவில் கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு வெளியான உக்ரைன் ஆவணப்படத்தில் அவர் இந்த கருத்துகளை கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபரை கொல்லப்போவது வேறுமல்ல, புதினின் நெருங்கிய சகாக்களே! ஏனென்றால், உக்ரைன் போர் களத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்கள் நம்பிக்கையில்லாமலும் அழுகும் வகையிலும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன. இந்த வீடியோ தான் ரஷ்ய அதிபர் புதின் மீது அவரது சகாக்கள் அதிருப்தியடைய காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவு என்ன ஆகும் என்பதை பார்க்க தான் போகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, கிரிமியா தீபகற்பம் மீண்டும் உக்ரைன் உடன் இணைவதே உக்ரைன் போரின் முடிவாக இருக்கும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறிய அந்த வார்த்தை உலக நாடுகளுக்கிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.