மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், அங்குள்ள மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்தி வருகின்றனர்.
இதற்காக நேற்று சாஜைங் பிராந்தியத்தின் பளிகியி என்ற கிராமத்தில் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மீது மியான்மர் ராணுவம் போர்விமானம் மூலம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 20 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியதுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.