ஈரோடு இடைத்தேர்தல் 2023 : நேற்று தனித்துப் போட்டி.. இன்று மெகா கூட்டணி.. யு-டர்ன் அடித்த அதிமுக!!

By Editorial Desk Updated on :
ஈரோடு இடைத்தேர்தல் 2023 : நேற்று தனித்துப் போட்டி.. இன்று மெகா கூட்டணி.. யு-டர்ன் அடித்த அதிமுக!!Representative Image.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நேற்று தனித்துப் போட்டி எனக் கூறிய அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், மெகா கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வோம் என யு-டர்ன் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா காலமானதால், ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரை திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

ஆனால் அதிமுக கூட்டணியில் என்ன நிலைமை என்பது இன்று வரை தெளிவாக தெரியவில்லை. கடந்த 2022 தேர்தலில் ஈரோடு கிழக்கில் அதிமுக சின்னத்தில் தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை இபிஎஸ் தலைமையிலான அதிமுக, தானே போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதற்கு தமாகாவும் ஆதரவு தந்துள்ளது.

ஆனால் அதிமுகவின் மற்றொரு பிரிவான ஓபிஎஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம், இல்லையெனில் தாங்களே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே பாஜக தனது நிலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்தே போட்டியிடும் என நேற்று அதன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் அறிவித்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியது.

இதையடுத்து இன்று இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எளிதில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த தேர்தல் செங்கோட்டையில் வைக்கத்தக்க அளவிற்கு, எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க உள்ளது. 

ஏனென்றால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லுக்குப் பிறகுதான், நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த குரல் டெல்லி செங்கோட்டையிலும் ஒலிக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் எந்தவிதமான தடங்கலும் இல்லை. பிரச்சாரத்தைப் பொருத்தவரை, அதிமுக மெகா கூட்டணியோடு பணிகளை மேற்கொள்ள உள்ளது." என்றார்.

அப்போது அதிமுக கூட்டணியில், தற்போதைக்கு தமாக மட்டுமே இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிடுவார்." என்று தெரிவித்தார்.

செங்கோட்டையன் நேற்று தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டு, இன்று திடீரென யு-டர்ன் அடித்து மெகா கூட்டணி எனக் கூறியதோடு, டெல்லி செங்கோட்டையில் இந்த குரல் எதிரொலிக்கும் எனக் கூறியுள்ளது அரசியல் வட்டாரரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

செங்கோட்டையனின் இந்த திடீர் ட்விஸ்ட், இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர நினைப்பதன் வெளிப்பாடு தான் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தொடர்பான செய்திகள்