
சத்து மாத்திரைகள் சாப்பிட்டு பள்ளி மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளி பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றில் சுமார் 94 மாணவிகளும், 5 ஆசிரியர்களும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் உணவு இடைவெளியின் போது, 6 ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் தங்களது வகுப்பறையில் இருந்தனர். அந்த சமயத்தில் ஆசிரியரின் மேஜையில் இருந்த சத்து மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சத்து மாத்திரையை சாப்பிட்ட சர்மிளா, தேகா, அஷிதா, ஷபிநயா, மற்றும் ஷாலினி போன்ற ஐந்து மாணவிகளும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனர். மேலும், அவர்கள் மயக்கம் அடைந்ததால் மாணவிகள் பதற்றம் அடைந்தனர். மயங்கி விழுந்த மாணவிகளை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சில நாள்களுக்கு முன்பு நீலகிரியில் இது போல, சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்ட மாணவிகள் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, தற்போது தர்மபுரியிலும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.