நிலத்தை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் ஒருமையில் திட்டியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ராணிப்பேட்டை காரை பகுதியில் சுமார் 25 ஆயிரத்து மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள இடத்தை பல ஆண்டுகாலமாக இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும், ஊர் திருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தி பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பங்களா கட்டுவதற்காக இடத்தை பறிமுதல் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் அவர்களிடம் மனு வழங்கினர்.
மக்கள் பயன்படுத்தும் நிலத்தை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே சென்று மனு கொடுக்க முயன்ற கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மனு அளிக்க வந்த விசிக மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் உள்ளிட்ட கட்சியினரை ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் பிரபு ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 10 பேர் மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர் . அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதியிடம் விசிகவினர் மனு கொடுத்தனர்.