
பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல், இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருந்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா, மாணவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகு, எப்போதும் போல பள்ளிகள் இயல்பாக செயல்படத் தொடங்கினாலும் அவர்களது படிக்கும் வழக்கம் மாறியது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்குச் சென்றது, அவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏராளமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசுத் தேர்வுகள் துறை சார்பில் சில தகவல்கள் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத் தேர்வு மீதான அச்சம் எழுந்ததே இதற்குக் காரணம் ஆகும்.
கொரோனா பதற்றம் நிறைவுறற்ற போதிலும், தற்போது புதுவிதமான காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது குறித்த அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த 2023 ஆண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகளை 50,674 மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்து மற்ற மொழி பாடத்திற்கும் தொடருமா என்ற அச்சம் எழுகிறது. இதற்கு பள்ளிக்கல்வித் துறை, மொழித் தாள் தேர்வுக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிவதுடன், அடுத்து வரும் பாடங்களுக்கான பொதுத் தேர்வில் மாணவர்களை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கிராமப் புறங்களில் மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இது அவர்களை பள்ளிப்படிப்பை மீண்டும் ஆரம்பிக்க தடையாகி விட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வெழுத வராமல் இருந்திருக்கக் கூடும்.
அதே சமயம், 50,000-க்கும் அதிகமாக தேர்வெழுதாமல் போனதற்கு கொரோனா காலத்தில் நடந்த குழந்தை திருமணமும் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார். இதில், மானவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்வு நாளன்று மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரியர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அச்சத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் போக்க வேண்டும் எனவும் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.