இந்தியாவில் மிகவும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகச் சென்னை சேப்பாக்கம் உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு பிறகு நாட்டின் 2ஆவது பழமையான கிரிக்கெட் மைதானமாக இது உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகப் கோப்பை போட்டிகள் நடைபெற்ற போது சேப்பாக்கம் மைதானத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டு, தற்போது வீரர்கள் தங்கும் அறை, அலுவலங்கள், புதிய கேலரிக்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கேலரிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கேலரி பகுதிக்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது. அந்த போட்டியில் புதிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.