
அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்து ஏற்பட்டதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பவர் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில இருக்கும் தேஷ்பூர் மிசாமரி ராணுவ முகாமிலிருந்து பணி நிமித்தம் காரணமாக சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று காலை மேஜர் ஜெயந்த், லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி போன்றோர் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், ஹெலிகாப்டரின் ரேடார் சிக்னல் காலை 9.15 மணி அளவில் துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், சேவைகள் வாரியப்படை, இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் உள்ளிட்டோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, மண்டாலா பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டு, இரு வீரர்களும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜெயந்தின் உடல் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, ராணுவ வீரரின் உடல், விமான நிலைய இயக்குனரகம் முன்பே அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு, ஜெயந்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்திற்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், இங்கு உரிய மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.