
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வீட்டில் இருந்த மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரின் மகள் தரணி. 19 வயதாகும் இவர் செவிலியர் படிப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு தோட்டத்தில் தனியாக இருந்த தரணியை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் அவரை தரதரவென இழுத்துச் சென்று கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடினார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் குடும்பத்தினர் கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த தரணியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தரணியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ளும் போது தான் பெரும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. தரணி 25 வயதான கணேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக கணேஷ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் அவருடன் இருந்த பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டார் தரணி. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் தரணி வீட்டில் தனியாக இருக்கும் போது அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் போலீசார் கணேஷை கைது செய்தனர்.