
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில், எப்போதெல்லாம் எதிர் கட்சி வரிசையில் அதிமுக அமர்கிறதோ அடுத்த தேர்தலில் பலம்வாய்ந்த ஆளும் கட்சியாக தான் உருவெடுக்கிறது.
உதாரணமாக, 1989ல் தோல்வி அடைந்த அதிமுக 1991 ல் மிகப்பெரிய வெற்றியடைந்து ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அப்போது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்காமல் விஜயகாந்தின் அருகாமையில் அமரும் நிலையில் இருந்தது. இப்போது மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது அதிமுக. எனவே, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என பேசினார்.
மேலும், டீக்கடையில் வேலை செய்தவரை சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தவர்கள் அதிமுக கட்சித் தொண்டர்கள். அப்படிப்பட்ட அதிமுகவின் தலைமை அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அடித்து உடைத்து சூறையாடுவதற்கு ஓபிஎஸ் துணை சென்றிருக்கிறார்.
ஏற்கனவே இரட்டை இலை சின்னம் முடங்கியதற்கு காரணமானவரே இந்த ஓபிஎஸ் தான். இப்போது மீண்டும் சின்னத்தை முடக்குவதற்காக திமுகவுடன் துணைப்போகிறார். திமுக ஓபிஎஸ் -ஐ தன்னுடைய கையாளாக தான் பயன்படுத்துகிறது என்று ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கிப் பேசினார் சி.வி. சண்முகம்.
மேலும் பேசிய சி.வி. சண்முகம், 'சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாகலாம். காலம் நெருங்கி கொண்டிருக்கிறது, அது யார் என்று நம்மால் சொல்ல முடியாது. அது கனிமொழியாகவும் இருக்கலாம், துரைமுருகனாகவும் இருக்கலாம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பேசியுள்ளார். இது திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.