இபிஎஸ்ஸா ஓபிஎஸ்ஸா.. யாருக்கு ஆதரவு..? பாஜகவின் பலே திட்டம்!!

By Editorial Desk Updated on :
இபிஎஸ்ஸா ஓபிஎஸ்ஸா.. யாருக்கு ஆதரவு..? பாஜகவின் பலே திட்டம்!!Representative Image.

அதிமுகவின் இரட்டை இல்லை சின்னம் இபிஎஸ்ஸுக்கா இல்லை ஓபிஎஸ்ஸுக்கா என இன்று நீதிமன்றத்தில் வெளியாகும் உத்தரவின் அடிப்படையில், யாரை ஆதரிப்பது என பாஜக முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆனால், அதிமுகவில் உட்கட்சி மோதலால் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரண்டு தரப்புமே போட்டியிட உள்ளதாக தனித்தனியாக அறிவித்திருந்தாலும், இன்னும் வேட்பாளரை அறிவித்தபாடில்லை. இதனால் யாரை ஆதரிப்பது என்று கூட்டணி கட்சிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

குறிப்பாக தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படும் பாஜக, இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தர உள்ளதா என்பதை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுக்குழுவில் தன்னை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உத்தரவு வந்தால், இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்பு பெற்றுவிடும். 

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யார் பக்கத்தில் இருக்கிறதோ, அவர்களுக்கே தங்கள் ஆதரவு என பாஜக முடிவு செய்துள்ளதால் தான், ஆதரவை வெளிப்படையாக அறிவிக்காமல் தாமதித்து வருவதாகவும், இன்று தீர்ப்பு வந்த பிறகு, இபிஎஸ்ஸா இல்லை ஓபிஎஸ்ஸா என முடிவு செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும், கமலாலய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தொடர்பான செய்திகள்