
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசினை அரசு வழங்கி வருகிறது. தற்போது, நெல்பயிரோடு சேர்த்து சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, வரும் ஆண்டு முதல் கம்பு, நிலக்கடலை, எள், கரும்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், வரும் ஆண்டு முதல் உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப் பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.