தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அப்போது தமிழ்நாட்டில் 5,239 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மூடவேண்டிய தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு 500 கடைகளை தேர்வு செய்வதற்கான கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை - தொழில்முறை, 50 மீட்டருக்குள் இடையே இருக்கும் கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளி, கோயில்களுக்கு அருகில் உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வின் முடிவில் தேர்வு செய்யப்படும் 500 கடைகளை மூட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் திருமணம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் மது விருந்து நடத்த அனுமதியளிக்கும் வகையில் அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் குவித்தது. இந்த நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது கவனம் பெற்று வருகிறது. ஒருவேளை, அதை மறைக்கத் தான் இதுவோ?