செங்கல்பட்டு அருகே 200 மில்லி லிட்டர் மட்டுமே பெட்ரோல் போட்டுவிட்டு நூறு ரூபாய் வாங்கியதால், பெட்ரோல் பங்க்கை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இனி தவறு நடைபெறாது என பங்க் நிர்வாகம் மன்னிப்பு கேட்டப்பிறகு அனைவரும் கலைந்துசென்றனர்.
செங்கல்பட்டை அடுத்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாரத் பெட்ரோல் பங்க். இந்த பங்கில் புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பெட்ரோல் போட்டதற்கு கூகுல்பே மூலம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதில் 200 மிலி லிட்டர் மட்டுமே நிரம்பியுள்ளதாக பெட்ரோல் நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியதற்கான பில் மற்றும் மீட்டர் கணக்கு காட்டுகிறது. என்மீது தவறில்லை என ஊழியர் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது. வாடிக்கையாளர் ராஜசேகருக்கு ஆதரவாக புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பெட்ரோல் பங்க்-ஐ சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து பங்க் தரப்பில் மிஷின் எப்போதும் தவறு செய்யாது. ஊழியர் மீது தவறு இருக்கவேண்டும் அல்லது வாகனத்தில் உள்ளே பெட்ரோல் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர் ராஜசேகர் மெக்கானிக்கை வரவழைத்து பெட்ரோல் டேங்க்கில் இருந்து முழு பெட்ரோலையும் எடுத்தும் 200 மிலி லிட்டருக்கு மேல் இல்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் பெட்ரோல் பங்க் நிர்வாகம் இனி இதுபோன்று நடக்காது என்றும் ஊழியர் தவறு செய்ததால் ஊழியரை பணியிலிருந்து நீக்கிவிடுவதாகவும் எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். இந்த பங்க்-ல் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாகவும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப இன்று ஊழியர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.