பெண்கள் 30 வயதுக்கு முன்பே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறினார். கவுகாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாகேத்ராவில் நடந்த விழாவில் அவர் இதை தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் அவர் பேசுகையில், “சிறு வயதிலேயே குழந்தைகளை பெற்றெடுத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தை திருமணத்தை தடுக்க முயற்சித்து வருகிறோம். அதேபோல, 30 அல்லது 35 வயதை எட்டிய பிறகு, நீங்கள் குழந்தை பெற்றாலும், அதில் சிக்கல்கள் உருவாக நேரிடலாம். பலர் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துகிறார்கள். இது சிக்கல்களை மேலும் அதிகரிக்கிறது.
22 வயது முதல் 30 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது நல்லது. ஏனென்றால் மனித உடலில் சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. கடவுள் நம் உடலை அப்படித்தான் படைத்திருக்கிறார். எனவே இன்னும் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் விரைவில் அதை செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.” என்று கூறினார்.
முதலமைச்சரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதுபோன்ற விசித்திரமான ஆலோசனைக்காக அவரை பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.