
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி உரையாற்றினார். அதில், அவர் மோடி சமூகத்தினர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உரையில், ராகுல் காந்தி அவர்கள் நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி அனைத்து திருடர்களுமே மோடி பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என கூறியிருந்தார். இது மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ ஆன பூர்னேஷ் மோடி, ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விசாரணை 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
கடந்த வாரம், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டார். மேலும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள்கள் அவகாசம் தந்துள்ளது என சூரத் நிதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)-ன் படி, எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் பதவி இழப்பர் என கூறுகிறது. இதில், ராகுல் காந்தி 2019- ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.