மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2024 தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், சம்பளதாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவை இல்லை என்று அறிவித்தார்.
தனி நபர் வருமான வரி தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், “ புதிய வருமான வரி திட்டத்தின்படி இனி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை.
மேலும், பழைய வருமான வரி திட்டத்தின் படி, வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் வரியும், ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரை 10 சதவிகித வரியும், ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவிகித வருமான வரியும் விதிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.