பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு இன்று குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2019 லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மிகவும் விறுவிறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது 2019 ஏப்ரலில் கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில் ராகுல் அவர்கள், "எல்லா திருடர்களுக்கும் மோடி என்பதை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்?" என்று பகிரங்கமாக விமர்ச்சித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது ராகுல் வயநாடு மக்களவை எம்.பி.யாக இருந்தார். இருப்பினும் சூரத்தில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் மார்ச் 23 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தி அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 499 மற்றும் 500 (அவதூறு) கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள துக்ளக் லேனில் உள்ள தனது பங்களாவை காலி செய்து, தனது தாயார் சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்றார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தனது விதித்த தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து கூடுதல் அமர்வு நீதிபதி ராபின் பி மொகேரா கூறுகையில், ராகுல் காந்தி ஒரு எம்.பி-யாக இருப்பதால் தான் கூறும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த வழக்கின் முதன்மையான சாட்சியங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் அவதானிப்புகளை மேற்கோள் காட்டிய அவர் "அதே குடும்பப் பெயரைக் கொண்டவர்களைத் திருடர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காந்தி சில இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
மேலும் இந்த வழக்கை தொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பூர்ணேஷ் மோடியின் குடும்பப் பெயரும் மோடி என்பதையும் நீதிபதி சுட்டிக்காண்பித்துள்ளார். எனவே, இதுபோன்ற அவதூறான கருத்துக்கள் நிச்சயமாக அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சமூகத்தில் அவருக்கு வேதனையை ஏற்படுத்தும் என்பதையும் கூறியுள்ளார்.