பிரதமர் நரேந்திரமோடி பிரான்சில் இரண்டு நாள் அரசு முறை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அந்நாட்டிற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின விழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, வர்ததகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரான்சில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி, இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்பட்டுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இரு தரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.